தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
அம்மா
அழும் போது கைக்குட்டையானாய்...
சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்...
தவழும் போது தரையானாய்...
நடைப்பழகும் போது நடைவண்டியானாய்...
உறக்கம் வரும் போது தாலாட்டானாய்...
பள்ளி செல்லும்போது குருவானாய்...
கல்லூரி செல்லும்போது தோழியானாய்...
மழை வேளையில் குடையானாய்...
கோடையில் நிழலானாய்...
இருளில் ஒளியானாய்...
இன்பத்தின் ஆதியானாய்...
துன்பத்தின் அந்தமானாய்...
குழப்பத்திற்கு முடிவானாய்...
முயற்சியில் துணையானாய்...
இலக்கை அடைய ஏணியானாய்...
வெற்றியில் பரிசானாய்...
தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்...
தடுமாறும் போது ஊன்றுகோலானாய்...
என் அனைத்து அசைவுகளும் நீயானாய்...
என்னுள் நானானாய்...
என்னைப் பெற்றுத் தாயானாய்...
என்ன வரம் கொண்டேனோ...
இன்று நீ சேயாய் மாறி விட்டாய்...
நான் உன் தாயாகவோ...?
Poet- riyashok
அப்பா
வெற்றி பெற்றாலும் பாராட்டு கிடைக்காது...
நன்மை செய்தாலும் அவரிடம் நன்மதிப்பு கிடைக்காது...
சிறு தப்பு செய்தாலும் கை தான் ஓங்கும்...
தவறு செய்ய நினைக்கும் போதே அவரின் கண்ஜாடை தடுத்துவிடும்...
உனைப் பெற்றதை நினைத்துப் பெருமை கொள்வதை ஒருபோதும் வெளியில் சொல்ல மாட்டார்...
கோபம் வந்தால் கண்டிப்பார்...
தப்பு செய்தால் தண்டிப்பார்...
முகம் கொடுத்துப் பேச மாட்டார்...
கொஞ்சி விளையாட மாட்டார்...
அதிகம் செலவு செய்ய மாட்டார்...
கஞ்சன் என்று பிறர் கூறினாலும் கவலை கொள்ள மாட்டார்...
தோழன் போல் உறவாட மாட்டார்...
தோள் கொடுக்கத் தயங்க மாட்டார்...
கை கோர்த்து நடக்க மாட்டார்...
கை உதறி விட மாட்டார்...
உனக்குப் பிடித்ததைச் செய்ய மாட்டார்...
உனக்குத் தேவையானதைச் செய்யத் தயங்க மாட்டார்...
உனைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க மாட்டார்...
ஒரு நொடியும் உனை மறக்க மாட்டார்...
உனையன்றி வேறுலகம் அறிய மாட்டார்...
உனைப் பெற்ற நாள் தன்னை மறக்க மாட்டார்...
அவரின் செயல்களில் நீ வேண்டுமானால் எதிரியைப் பார்க்கலாம்...
ஆனால் அவர் எப்போதும் உன் கண்களில் தன் பெற்றோரையேக் காண்பார்...
சுலபமாய்த் தெரிந்து கொள்ள அவர் ஒன்றும் புரிதலுக்கு உட்பட்டவர் அல்ல...
அப்பா என்ற ஒற்றை வார்த்தைக்குள் தன் ஒட்டுமொத்த உணர்ச்சிகளையும் அடக்குபவர்...!
Poet - riyashok
தன்னம்பிக்கை
முடிந்தவரை முயன்றும் பயனற்றுப் போன செயல்கள்...
எட்டாக்கனியாய் உயரத்தில் இருக்கும் இலட்சியம்...
அதை ருசித்தே ஆக வேண்டும் என்ற கொள்கை...
ஊராரின் அலட்சியப் பார்வை...
உண்மையில் நீ தகுதி உடையவள்தானா என்ற வாழ்க்கையின் ஏளனம்...
தோல்விகள் தந்த விரக்தி...
முயற்சிகள் தந்த ஏமாற்றம்...
இவற்றுக்கு இடையில் சிக்கி நெருப்புக் குழம்பில் தத்தளிக்கும் மனதை...
இலட்சியப் பாதையில் இட்டுச் செல்வது தன்னம்பிக்கை மட்டுமே...!
Poet - riyashok
அன்பு
மனிதன் தோன்றிய காலம் தெரியவில்லை...
மாறிய மரபுகள் புரியவில்லை...
கடந்த காலம் நினைவில் இல்லை...
நிகழ்காலம் கையில் இல்லை...
எதிர்காலம் அறியவில்லை...
உன் மீது நானும்...
என் மீது நீயும்...
கொண்ட அன்பு மட்டும் ஒருபோதும் மாறவில்லை...!
Poet - riyashok
பிரிவு
கைக்கோர்த்து நடந்த நிமிடங்கள்
இன்று கனவாய் கசக்கிறது...
பேசி ரசித்தத் தருணங்கள்
இன்று இரணமாய்ச் சுடுகிறது...
தோள் மீது சாய்ந்த தோரணையோ
இன்று கணமாய் கணக்கிறது...
உன் பிரிவு தந்த வலியோ
நெஞ்சை முள்ளாய் தைக்கிறது...
இருளடைந்து பிணியில் கிடக்கும்
என் மனதுக்கு...
உண்மையான மருந்து
உன் ஒற்றை வார்த்தை மட்டுமே...!
Poet-riyashok
பாடல்
மனம் முழுதும் பாரம்...
உடல் செயலற்ற நிலை...
மனதைக் தைக்கும் சோகம்...
வாழ்க்கை மீதான பயம்...
வழியெங்கும் தடை...
அடைத்து விட்ட பாதை...
பாதை மாறும் பயணம்...
முடியுமா என்ற எண்ணம்...
முடியாதோ என்ற பயம்...
பிறப்பு முதல் இறப்பு வரையிலான
வாழ்க்கையின் ஓட்டத்திற்கு...
ஒரே ஓய்வு...
செவியைத் தொடும் இனிய பாடல்களே...!
Poet - riyashok
பயணம்
ஜன்னலோர இருக்கை...
சில்லென்ற குளிர்காற்று...
இதமான இசை...
மனம் மயக்கும் பாடல்கள்...
அன்பாய் தோளில் சாய்த்துக் கொள்ள நீ...
எல்லாம் இனிதாய் அமைந்தால்...
சுகமாய் ஒரு தொலைதூர பயணம்...
வாழ்நாள் முழுதும் உன்னோடு...!
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
Poet - riyashok
காதல்
அதகாலைச் சூரியன் அழகாய் உதிக்க...
இலேசாய்ச் சிவந்த வானம் கண்களில் வண்ணம் தீட்ட...
பார்வை எல்லாத் திசைகளையும் தேட...
தூரத்தில் மிதந்து வரும் உன் உருவம்...
மனதில் லட்சம் மாயங்கள் செய்ய...
விடியல் என் வசமாகிறது...!
Poet - riyashok
காதல்
வஞ்சமில்லா நெஞ்சில்...
உன்னைச் சுமக்கிறேன்...
இன்பமான இந்த சுமை...
பேறாதத் தாயாய் என்னை உணர வைக்கிறது...
அன்பே...
காலம் உள்ள வரை...
என் நெஞ்சில் குடியிரு...
வாடகை ஒன்றும் வேண்டாம்...
மாறாய்...
உன் இதழ்களால் ஒரு கவிதை புனைந்திடு...
என் நெற்றியில்...!
Poet - riyashok
காதல்
என்றும் நீங்காத அன்பில்...
நனைந்து நனைந்து...
காய்ச்சலில் கிடக்கிறேன்...
மருந்து மாத்திரைகள் வேண்டாம்...
உன் காதல் கொண்டு வருவாயா...?
Poet - riyashok
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.